Monday 3 December 2012

மதுரை

பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகைமார்தம்
மெல்லடியும்
மயங்கி ஒலித்த
மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்
பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும்
- வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும்
ஆண்ட பரம்பரைச்
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும்
காணக் கிடைக்கும்
பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால்
இளமதுரை

மல்லிகை மௌவல்
அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம்
குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த
வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை -
நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன்
நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால்
- அவள்
கந்தக முலையில்
எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய
தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும்
தென்மதுரை

தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன்
என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும்
வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய
மாமதுரை - இது
மரபுகள்
மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப்
பூவென்றும் - அதன்
மலர்ந்த
இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
- அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய
பால்மதுரை - வட
மதுரா புரியினும்
மேல்மதுரை

மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும்
- அந்த
அந்நியரில்சில
கண்ணியரும்
ஆட்சிபுரிந்த
தென்மதுரை -
மீனாட்சியினால்
இது பெண்மதுரை

மண்ணைத் திருட
வந்தவரைத் - தம்
வயிற்றுப்
பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய
தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய
தூய்மதுரை

அரபுநாட்டுச்
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல்
- ஒரு
மண்டபம்
திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும்
கலைமதுரை - இது
கவிதைத் தமிழின்
தலைமதுரை

வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய
பாடல்களும்
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும்
தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும்
தென்மதுரை

போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
வளையொலியும்
தொடர்ந்து கேட்கும்
எழில்மதுரை - கண்
தர்ங்காதிருக்கும்
தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள்
புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம்
பெருக்கியதில்
வேலைகள் இல்லாத்
திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள்
சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால்
வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் -
நதியைப்
பட்டாப் போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த
முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும்
பதிமதுரை
  
     -கவிஞர்.வைரமுத்து

Friday 7 September 2012

மரம்

வணக்கம்
மரங்களைப் பாடுவேன்.

வாரும்  வள்ளுவரே
மக்கட்
பண்பில்லாதவரை  என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?

வணக்கம்,அவ்வையே
நீட்டோலை வாசியான்
யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?

பக்கத்தில் யாரது பாரதி தானே?
பாஞ்சாலி மீட்க்காத பாமரரை என்ன
வென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்!
மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?

மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சிரியகுறி,
நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
உயிர் ஒழுகும் மலர்கள்,
மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
மனிதன் தோன்றும் முன் மரம் தொன்றிற்று!
மரம் நமக்கு அண்ணன்,
அண்ணனை பழிக்காதீர்கள்!

மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய
கூடாரம்,
மரம் அப்படியா?
வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம்
கொண்டது அதுவேதான்!

மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால்
முற்றுப் புள்ளி.
மரம் இருக்கும் வரை பூ பூக்கும்
இறக்கும் வரை காய் காய்க்கும்.

வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?

மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம்
வயது சொல்லும்.
மனிதனை அறுத்தால் உயிரின்
செலவைத்தான்
உறுப்பு சொல்லும்.

மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்.
நமக்கோ உயிர் பிரிந்தாலும்  மயிர்
உதிர்ந்தாலும்.
ஒன்றென்று அறிக!

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய் சலவை செய்வது?

மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய்
மனுச் செய்வது?

மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏறி?

பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும்
உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன் மரம்!
மரத்தின் முதல் எதிரி மனிதன்!
ஆயுதங்களை மனிதன் அதிகம்
பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!

உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!

பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்,
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்,
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின்
உபயம்,
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின்
உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின்
உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின்
உபயம்

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம்
வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!

    -வைரமுத்து


Go not to the temple


Go not to the temple to put flowers
upon the feet of God,
First fill your own house with the
Fragrance of love...

Go not to the temple to light candles
before the altar of God,
First remove the darkness of sin from
your heart...

Go not to the temple to bow down
your head in prayer,
First learn to bow in humility before
your fellowmen...

Go not to the temple to pray on
bended knees,
First bend down to lift someone who
is down-trodden. ..

Go not to the temple to ask for
forgiveness for your sins,
First forgive from your heart those
who have sinned against you.
  
     -GURUDEV Rabindranath Tagore


Friday 10 August 2012

வாளினை எடடா!


வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியே!உயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!
   
             -பாரதிதாசன்


Friday 27 July 2012

மதனின் வந்தார்கள் வென்றார்கள் மின்னூல்

மின்நூலிற்கு கீழ் காணும் லிங்கை சுட்டவும்

link

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன்,
ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர்
பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.
மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர்.
ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர்
எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர்
மசூதி சர்ச்சை பெரிய அளவில்
கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த
நேரத்தில் இப்படி ஒரு தொடரா?' என்று சிலர்
நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால்,
'ஆரம்பித்த நேரம் சரியில்லையோ' என்று ஒரு கணம்கூட
அவர் தயங்கவில்லை. 'இதுதான் சரியான சமயம்...
உண்மைகளைச் சொல்வதனால் நன்மைதான் ஏற்படும்...
தொல்லைகள் வருவதில்லை' என்ற திடமான
நம்பிக்கையோடு எழுதினார்.
மதன் மொகலாய சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல,
உண்மையில் ஒரு மகத்தான வெற்றியாக தொடர் அமைந்தது.
எந்தக் களங்கமும் அவர் எழுத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு மன்னரையும் நேசித்து,
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில்
இருந்து பார்த்தது போல எழுதிய
பாங்கு அதிசயமானது. வாசகர்களும் 'சொக்குப்பொடி'
போட்டது போல அவர் எழுத்துக்கு மயங்கினார்கள்.
லட்சக்கணக்கானோர் படித்தார்கள், பிரமித்தார்கள்.